Tuesday, February 26, 2008

"நான்கு பெக் ஸ்காட்ச்சும், அறுபது சிகரெட்டுகளும்" ‍ஒரு நிர்வாணச் சாமியாரின் வாக்குமூலம்.


கொல்லிமலையில் நிர்வாணமாக அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கக்கூடிய ஒரு சாமியாரைப் பார்க்கப் போகிறோம் என்பதால், சீரியஸான எதிர்பார்ப்புடன்தான் உள்ளே நுழைந்தேன்.

கதவைத் தாண்டி காலடி எடுத்து வைத்தலிருந்தே என் கற்பனைகள் ஒவ்வொன்றாக உடையத் தொடங்கின. கதவு, மின்னனு அட்டையை உள்வாங்கிக் கொண்ட பின்னரே திறந்தது. உள்ளே நுழைந்தால், ஊழியர்கள் இதமான குளிரில் லேப்டாப்பைத் துழாவிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ட்ரெண்டுக்கு ஏற்ற ஃபேஷன் உடைகளை அணிந்த அழகிய மங்கைகள் ஆங்காங்கே விளம்பரப் படங்களில் தொங்கிக் கொண்டிந்தார்கள்.

கண்ணுக்கு இதமான வெளிச்சம் சிதறியிருந்த ஓர் அறையில், தனது ஆப்பிள் சிஸ்டத்திலிருந்து விரல்களை விடுவித்து, "ஹலோ! ஹவ் ஆர் யூ?” என்று கை குலுக்கி வரவேற்றார் ஸ்வாமி பிரணவானந்தா.

ஆசிரமத்தில் விளைந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சூடான காஃபியை பருகியபடியே "பொதுவாக
ஐரோப்பியர்கள் கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு பிரெஞ்சுப் பிரஜையான நீங்கள் எப்படி இந்துக் கடவுள்களைப் பின்பற்றும் சாமியாராக மாற்றமடைந்தீர்கள்? என்றக் கேள்வியுடன் ஆரம்பமானது உரையாடல்.

அது 71-ம் ஆண்டென்று நினைக்கிறேன். வேலை விஷயமாகத்தான் மனைவி குழந்தையுடன் இந்தியா வந்தேன். அப்பொழுதெல்லாம் எங்களுக்கு இந்தியா என்றால் மகாராஜாக்கள், தேங்காய், புலி, வறுமை, நிறைய கலாச்சாரங்கள் என்பது மட்டுமே நினைவுக்கு வரும்.

இந்தியா வந்ததும் சென்னையில் உள்ள வர்த்தக நிறுவன‌ம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் மூன்று நான்கு வருடங்கள் நன்றாகத்தான் ஓடியது வாழ்க்கை. திடீரென வேலை இழந்து வருமானத்துகு வழியில்லாமல் வறுமைக்குத் தள்ளப்பட்டேன். இதனால், மனைவியும் குழந்தையும் என்னை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது.

தினம் நான்கு பெக் ஸ்காட்சும், அறுபது சிகரெட்டுகளுமாக கழிந்த என் வாழ்க்கை, ரோட்டோரக் கடைகளில் சிங்கிள் டீயும், வீசியெறிந்த துண்டு சிகரெட்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துப் புகைக்கும் நிலமைக்கும் வந்து நின்றது.

விஸ்கியோ, பிராந்தியோ கனவுகளில் மட்டுமே நினைத்துப் பார்க்கிற ஒர் வஸ்துவாகிப் போனது. எப்பொழுதாவது நாலைந்து பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தேன்"

கூறிவிட்டு கண்களை மூடிச் சிந்தனையில் ஆழ்கிறார் பிரணவானந்தா.

"இதோ புகைப்படத்தில் இருக்கிறாரே ஸ்வாமி சர்வேஸ்வரா! இவர்தான் என் குருஜி. இன்றைய என் நிலை அத்தனைக்கும் இந்த மகான்தான் காரணம். எவ்வளவோ வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் இருந்தும், தனக்கென்று எதையும் ஆசைப்படாத மனிதர்.

வாழ்க்கையே வெறுத்து, மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்த என்னை, நன்பர் ஒர்வர்தான் சுவாமிஜியிடம் அழைத்துச் சென்றார். உளுந்தூர்பேட்டைதான் ஸ்வாமிஜி இருந்த இடம்.

தொழுநோயால் தாக்கப்பட்டு, இரண்டு கைகளும் கால்களும் இழந்த நிலையில் மிக சந்தோஷமாகவே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இதைப் பார்த்தபோதுதான் எனக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்தது. ‘இப்படிப்பட்ட மனிதரே வாழ்க்கையைச் சிரமமுமின்றி எதிர் கொள்கிறபோது, திடகாத்திரமாக உள்ள நம்மைப் போன்றவர்களால் ஏன் வாழ முடியாது?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அவரையே என் மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு அங்கேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்தேன். அவரின் போதனைகளைக் கேட்டுத் தெளிந்தேன்.

சொன்னால் நம்புவீர்களா?

ஒருநாள் சென்னையிலிருந்து குருஜியை பார்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை வந்திருந்தேன். வானம் நீலம் படர்ந்து காணப்பட்டது. பூமியில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம். நான் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

குருஜி என்னைப் புன்முறுவலுடன் கையமர்த்திவிட்டு, வானத்தை ஒரு பார்வை பார்த்தார். என்ன ஆச்சர்யம்! இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. திடீரென மேகம் திரண்டு, வானம் இருண்டு, மெல்லிய மழைச் சாரல் வீச ஆரம்பித்துவிட்டது.

அதற்கு மேல் என்னால் முடியவில்லை. நான் முழுமையாக குருஜியிடம் சரணாகதி அடைந்துவிட்டேன். கிரிஸ்டியன் ஃபேப்ரே என்கிற பழைய மனிதன் இறந்து போய் பிரணவானந்தா என்று குருஜியால் உயிர்விக்கப்பட்டேன். குருஜி ஒரு துறவி மட்டுமல்ல. அவர் ஒரு சித்தர்.”

பிரணவானந்தா சொன்னதைக் கேட்டதும், என‌க்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

"சுவாமிஜி! சாதாரண சாமியார்களைப்போல் இல்லாமல் சித்தர்கள் அதீத சக்தி படைத்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களின் உடலில் அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி இருந்திருக்குமே! அப்படியிருக்கையில், தொழுநோய் எப்படி தாக்கியிருக்க முடியும்?”

இப்படி எதிர்க் கேள்வி வைக்கிற நேரங்களில், பொதுவாக சாமியார்கள் கோபப்படுவார்கள்.

"நல்ல கேள்வி" என்று ஆமோதித்தவாறே "நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், அவ்வளவு சக்தி படைத்த குருஜி நோய்க்கிருமிகளை தனக்குள் ஏன் அனுமதித்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவரால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரக்கூட முடியாது. கிட்னி பழுதடைதிருந்தது. நான் நல்ல நிலைக்கு உயர்ந்து, என்னிடம் பணம் புழங்க ஆரம்பித்த பிறகு, குறைந்தபட்சம் அவருக்கு மருத்துவச் சேவை செய்யக்கூடவா முடியாமல் போகும்? ஆனால், கடைசிவரையில் மருத்துவம் பார்த்துக் கொள்ள குருஜி அணுமதிக்காததோடு, ஒரு பைசாகூட யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.

இன்று, நடக்கிற ரோட்டில் ஆரம்பித்து இமயமலைவரை எத்தனையோ சாதுக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான சாதுக்கள் எல்லாவற்றையும் துறந்து, பிச்சை எடுத்து உயிர் வாழ்வதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் 90 % பிச்சை எடுத்துச் சாப்பிட்டே காலம் கழிக்கிற இவர்கள் 10 % சாமி கும்பிடுகிறார்கள். அந்த பத்து சதவிகிதத்தையும் நாளைய சாப்பாட்டுக்காக வேண்டுவதிலேயே செலவிடுகிறார்கள்.

ஏதோ அவர்களிடம் ஒரு சக்தி இருப்பதாக மக்கள் நம்பினால், அதையே தங்களுக்கு சாதகமாக்கி வியாபாரமாக்கிவிடுகிறார்கள். மரத்திற்கு மரம், மூலைக்கு மூலை, காணிக்கைகள் மூலம் கடவுளிடம் அழைத்துச் செல்கிற சாமியார்கள் பெருகிவிட்டார்கள்.

எனது அனுபவத்தைப் பொறுத்தவரையில், கடவுள் என்பதற்கு பெயரோ, உருவமோ கிடையாது. எளிய மக்கள் வழிபாடு மூலமாக கடவுளை அடைய, உருவங்கள் உதவ முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனது அறைகளிலும் அத்தகைய கடவுள்கள் இருக்கிறார்கள்.

ஒரு ரூபாய் உண்டியலில் ஆரம்பித்து ஒரு கோடி, பல கோடிவரை பணம் பெறும் சாமியார்களுக்கு மத்தியில், தன் மருத்துவத் தேவைகளைக்கூட புறக்கணித்துவிட்டு, பணமே வேண்டாமென்று வாழ்ந்த எங்கள் குருஜி மதிப்புமிக்கவர்தானே.

தன்னுடைய மரணத்தைக்கூட அவர் திட்டமிடவில்லை. இறந்த பிறகு எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில்கூட இடத்திற்குத் தக்கபடி மக்களுக்கு நம்பிக்கைகள் இருக்கிறது.

எரிக்கிறார்களோ, புதைக்கிறார்களோ! இறந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் கோடிக்கணக்கான மூலக்கூறுகளாகப் பிரிந்து காற்றாக, நீராக, நிலமாக, தாவரமாக என்று எல்லாவற்றிலும் கலந்து வாழ்கிறான் என்பதே உண்மை.

குருஜி ஏன் தன் உடலை நோய்க்கிருமிகளுக்கு உணவாக, உறைவிடமாக நிலை நிறுத்திக் கொண்டார் என்கிற உண்மை தெரிந்தால், நான் ஏன் உங்களோடு பேசிக்கொண்டிருக்கப் போகிறேன்"

நிதானமாக பதில் கூறுகிறார் பிரணவானந்தா.

“ஒரே நேரத்தில் எப்படி உங்களால் துறவியாகவும், தொழிலதிபராகவும் செயல்பட முடிகிறது?”

சிரித்தபடியே சொல்கிறார்.

''நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நான் ராத்திரி ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரை மட்டுமே காதலிப்பேன் என்று டைம் ஃபிக்ஸ் பண்ணிவிட்டா காதலிப்பீர்கள்?

நீங்கள் உங்கள் தினசரி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுகூட காதல் உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்வீர்கள் அல்லவா? கடவுளும் அப்படித்தான்.

எனது நிர்வாக விஷயங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதுகூட பக்தி என்னுள் சுடர்விடுவதை உணர முடிகிறது. எதுவும் எதற்கும் தடையாய் இருப்பதில்லை.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமாக சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஃபேஷன் இண்டர்நேஷனல்’ என்கிற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பிரணவானந்தா, இதில் வரும் லாபத்தை சாதாரண ஆயா முதல் ஆஃபீசர்வரை அத்தனை பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து வருகிறார்.


"ஓய்வு நாட்களில் கொல்லிமலையில் உள்ள உங்களின் ஆசிரமத்தில் நிர்வான நிலையில் இருந்தபடியே பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்களாமே?”

"ஆமாம். குருஜிதான் இந்த இடத்திற்கு என்னை போகச் சொன்னார். 36 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள அந்த ஆசிரமத்தில், எல்லாமே இயற்கையாக விளைகின்றன. மின்சாரம்கூட சூரிய சக்தியிலிருந்துதான் எடுக்கிறோம். முன்புபோல பெருவாரியான மக்கள் கூட்டத்தை இப்போது அனுமதிப்பதில்லை. ஆரம்பத்தில் அமைதியாக வருகிறவர்களால், போகப் போக இயற்கைச் சூழல் மாசுபடத் தொடங்குகிறது. பக்தர்களைப் பயன்படுத்தி பிசினஸ் செய்யவும் நான் விரும்பவில்லை. இயற்கையோடு வாழ்தல் என்பதுதான் இதன் சிறப்பு''.

“எங்கோ யாராகவோ பிறந்தீர்கள், எங்கோ இன்னொருவராக வாழ்கிறீர்கள். நீங்கள் யார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?”

''நான் பிரான்சில் கிருஸ்துவனாகப் பிறந்தேன். இந்தியக் கலாச்சாரங்களின்படி வாழ்கிறேன். எப்படி வாழ வேண்டும் என்பதை நாமே தீர்மாணிக்க வேண்டும். நான் கிருஸ்தவனோ அல்லது இந்துவோ அல்ல. ஒரு சராசரி மனிதன், அவ்வளவு தான்''.

கை குலுக்கி விடை பெறுகிறார் ப்ரணவானந்தா.

-நான் கடவுள்

No comments: