Saturday, April 5, 2008

அலங்கோலமாக்கிய அலர்ஜி -இளம்பெண்ணின் கண்ணீர் கதை.


லர்ஜி வந்தால் ஆளே அசிங்கமாகி, கால்கள் செயலிழந்து, மூச்சுவிட முடியாமல் மரணத்தை நோக்கிக் காத்திருப்பீர்களா? நிச்சயமாக! அது உங்கள் மருத்துவரைப் பொறுத்தது. சாதாரண 'டஸ்ட் அலர்ஜி' அழகான இளம்பெண் ஒருவரை அநியாயத்திற்கு அலங்கோலமாக்கி வாழ்வையே நாசமாகிவிட்ட கதை இது.

பிரியா ஒரு பி.ஏ. பட்டதாரி, வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. எல்லாப் பெண்களைப் போலவே இளமையாய், கனவுகளோடு நெய்வேலி அனல்மின் நிலையக் குடியிருப்பில் தன் அப்பா செல்வராஜ், தாய் எப்சி மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.

அப்படியரு கோலத்தில் பிரியாவைப் பார்த்தபோது மனசுக்கு ரொம்பவே சங்கடமாய் இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், தெருக்களில் தேங்கி நின்ற தண்ணீர் சாக்கடையாய் மாறியிருந்தது. தவழ்ந்து வந்ததால் பிரியாவின் உடைகளும் சேரும் சகதியுமாய் காட்சியளித்தது. ஊணமுற்றவர்களிலேயே இப்படிப்பட்டவர்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள்.

''தம்பி, தங்கச்சி பேரைப் போட்றாதீங்க. நான் இன்னைக்கோ, நாளைக்கோ... சாவப்போற கட்டை! என்னால அதுங்களுக்கு அசிங்கம் வரக்கூடாதில்ல... அதான்'' என்றபடி புன்னகை தவழ ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.
''யாருங்க இது?'' என்றேன். ''நான்தான் சார்! நல்லா இருக்கேனா? பி.ஏ. படிக்கும் போது எடுத்தது'' சிரித்தபடியே ஆரம்பித்தவரின் முகம் அடுத்த கணமே சுறுங்கிவிட்டது. அனிச்சையாய் கண்களில் கண்ணீர். ''என் கோலத்தை பாத்தீங்களா? கருப்பா, அசிங்கமா, உடம்பும் பெருத்து, நடக்கவும் முடியாம! எதுக்கு நான் உயிரோடு இருக்கணும்? என்னைப் போல நிலமை வேறெந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார்'' என்படி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன் கதையச் சொல்ல ஆரம்பித்தார்.

''அப்போ எனக்கு இருபது வயசு. எப்பப் பாத்தாலும் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிடவே கஷ்டமாயிருச்சி. நெய்வேலி, நிலக்கரி நகரம் இல்லையா? ஒரே... தூசு மண்டலமா இருக்கும். அதான் ஒத்துக்கலைன்னு சொல்லி என்.எல்.சி ஆஸ்பிட்டல்ல போய்ப் பார்த்தேன். ஊசி, மாத்திரைலாம் போட்டு அனுப்பினாங்க. கொஞ்ச நாள் நல்லா இருக்கும், அப்புறம் வீசிங் வர ஆரம்பிச்சிடும். திருப்பி ஆஸ்பிட்டல், திருப்பியும் ஊசி. இப்படியே போட்டதுல உடம்பு கொஞ்சம் கொஞ்சமா ஊதி பெருசாயிட்டுது. என்.எல்.சி.யில் கேட்டப்போ, மெட்ராஸ்ல பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாம் சரியா போய்டும்னு சொன்னாங்க.
அதே மாதிரி ராமச்சந்திரா ஆஸ்பிட்டல்ல ஒரு மாசம் ஐ.சி யூனிட்ல வச்சிருந்துட்டு, 'பொண்ணுக்கு ஸ்டீராய்டு அதிகமாயிருச்சி. குணப்படுத்தறது கஷ்டம்'னு சொல்லிட்டாங்க. அங்கிருந்து என்.எல்.சி. மூலமா அப்பல்லோவுல சேர்த்தாங்க. அங்க ஒரு டாக்டர் போட்ட ஊசியால காலெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சிட்டது.

2000-ல அப்பா ரிட்டைராயிட்டார். அதனால, பிரைவேட் ஆஸ்பிட்டல்ல இருந்து என்.எல்.சி.க்கு வரவேண்டியதாப் போச்சு. அவங்க, 'கிட்னி ஃபெயிலியர் ஆகியிருக்கும் போல தெரியுது. இனிமே நீங்க சொந்தக் காசுலதான் பாத்துக்கணும்'னு அனுப்பி வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அண்ணாமலை யூனிவர்சிட்டி ஆஸ்பிட்டலுக்கு நடையா நடந்ததுல முகமெல்லாம் கறுத்து, உடம்பு ஓவரா குண்டாயிருச்சி. திடீர்னு ரெண்டு காலும் செயலிழந்து நடக்கவே முடியாமப் போயிடுச்சு. இப்போ வெளியே போகனும்னா, ரெண்டு பலகைங்களை வச்சுக்கிட்டு தவழ்ந்து, தவழ்ந்து ஆமை மாதிரி போற நிலமைக்கு வந்துட்டேன். அப்போதான் ஒரு யோசனை வந்தது. இனி உயிரோட இருந்து பிரயோஜனம் இல்ல. செத்த பிறகாவது நாலுபேருக்கு உதவட்டுமேன்னு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு என் உடம்பை தானமா எழுதி வச்சிட்டேன்.

டாக்டருங்க கடவுளுக்குச் சமம்னு சொல்வாங்க. ஆனா பாருங்க! என்னை ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி உக்கார வச்சிட்டு, 'இவங்க தான் ஸ்டீராய்ட் பேஷண்ட். ஸ்டீராய்ட் அதிகமானா இப்படித்தான் ஸ்கின் கருப்பாயிடும். இது அபூர்வமான கேஸ்'னு சொல்லி போட்டோ எடுத்தாங்க. என்னோட விரல், கை, கால், முதுகெல்லாம் அக்குவேறு ஆணிவேறா பாத்துப் பாத்து குறிப்பெடுத்தாங்க. எனக்கு அழுகை தாங்க முடியலை. வீட்டுக்கு வந்துட்டேன்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி தம்பியும், தங்கச்சியும் கல்யாணமாகி அவங்கவங்க மாமியார் வீட்டோட (மந்தாரக்குப்பம்) செட்டிலாகிட்டாங்க. சுமாமி வந்தப்போ பாண்டிச்சேரிக்கு போன எங்கப்பா இதுவரைக்கும் திரும்பி வரலை. அப்போ கடலூர் கலெக்டராக இருந்தாரே! ககன்தீப்சிங் பேடி. லயன்ஸ் கிளப் மூலமா அவர் கொடுத்த அஞ்சாயிரத்தை வச்சு நானும் எங்கம்மாவும் வடலூர்ல குடியேறினோம். ஆறுமாசம் எங்கூட இருந்த அம்மா, நடக்க முடியாதவளாச்சேன்னுகூட பாக்காம என்னைத் தனியா விட்டுட்டு, அவங்க மட்டும் தம்பி வீட்லயே போய் தங்கிட்டாங்க.

தனியா இருந்த எனக்கு எங்கப்பாவோட ஃபிரண்ட் ஒருத்தர்தான் வீட்டு வாடகை முதற்கொண்டு எல்லா உதவியும் செஞ்சார். பாவம்! அவரும் எவ்வளவுதான் செலவு பண்ணுவார்? மீண்டும் கலெக்டர்கிட்ட போய் உதவி கேட்கலாம்னு போனேன். இது நடந்து மூணு மாசம் இருக்கும். புது கலெக்டர் வந்திருக்கிறதா சொன்னாங்க. வாசல்ல பெறுக்கி கூட்டிக்கிட்டிருந்த ஒரு அம்மா, 'இந்தா! கலெக்டருக்கு இன்னா சம்பாரிச்சா போட்டுக்கிற. இப்டியே அநாதைன்னு சொல்லிக்கினு வந்துடுவாளுங்க'ன்னு அசிங்கமா பேசினாங்க. அங்க இருந்த பியூன் ஒருத்தர், 'மூச்சுவிட சிரமமா இருக்குதுன்றியே! கொஞ்சூண்டு விஷத்தை குடிச்சினா, ஒரேயடியா பிரச்சினை முடிஞ்சிடும்'ன்னார். கலெக்டர் பி.ஏ. என்னைப் பாத்துட்டு 'உன்னைப் பாத்தா எய்ட்ஸ் நோயாளி மாதிரி தெரியுது. முதல்ல வெளியே போ!'ன்னு விரட்டியடிச்சிட்டார்.

அம்மாவும் என்னை வந்து எட்டிப்பாக்குறது இல்ல. வீட்டு வாடகை கட்டாததுனால, ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொல்லிட்டார். இதோ... இன்னைக்கோ, நாளைக்கோ! எப்ப வேணாலும் செத்துப் போய்டுவேன். அதுக்கு முன்னாடி எனக்கு நடந்த கொடுமைகள இந்த உலகத்துக்குச் சொல்லணும். அதான், உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு உங்ககிட்ட சொல்றேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா அவனை அங்க போய் பாத்துக்கிறேன். என்னை மாதிரி நிலமை, உலகத்துல வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார். ம்... முக்கியமா ஒண்ணு! யாராவது டாக்டருங்களைப் பாத்தா, நான் செத்த பிறகு என் உடம்பை என்ன வேணா பண்ணிக்கச் சொல்லுங்க''

-ஒட்டுமொத்த துயரங்களையும் என் மீது சுமத்திவிட்டு அமைதியானார் பிரியா. இப்பொழுதெல்லாம் ஒரு சின்ன தும்மல் வந்தால்கூட... போட்டோவில் லட்சணமாய்ப் பார்த்த பிரியாவும், நேரில் பார்த்த பிரியாவும் மாறி, மாறி என் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள்:

பிரியா தான் எடுத்துக் கொண்ட மருந்துகளாக Ranitin, Deriphyllin, Solumedrol 125, Dexamethasone phospate (Decdan) ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமாக கல்பாக்கம் மக்கள் மருத்துவரான புகழேந்தியிடம் கேட்டபோது, ''ஸ்டீராய்ட் என்பது எந்த ஒரு வியாதிக்குமான மருந்து. இயல்பு நிலைக்கு மாறாக உடல் கடின சூழலுக்கு ஆளாகும்போது தன்னிச்சையாக உடம்பில் ஸ்டீராய்ட் உற்பத்தியாகும். இந்த நிலையில், ஊசி மூலமாகவும் ஸ்டீராய்ட் செலுத்தப்பட்டால் உடலில் உப்புச்சத்து அதிகமாகி தேவையில்லாத சதைவிழ ஆரம்பிக்கும். பிக்மெண்டேஷன் எனப்படும் கருப்பு நிறமிகள் உருவாகி உடல் கறுத்துப் போகும். மேலும் கால்சியம் வெளியேறி எலும்புகள் உருக ஆரம்பிப்பதால் Proximal Myopathy ஏற்பட்டு தொடையில் உள்ள தசைகள் செயலிழந்து நடக்க இயலாமல் போயிருக்கும். கண்பார்வை, மூளை ஆகியவற்றை மங்கச்செய்து தொடர்ந்து ஸ்டீராய்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கும். பிரியா எடுத்துக் கொண்ட மருந்தில் ஸ்டீராய்டான Decdan மட்டுமே தீவிரமான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடியது'' என்கிறார்.

''எமர்ஜென்சியின் போது மட்டுமே ஸ்டீராய்ட் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அலர்ஜியினால் பாதிக்கப்படுபவர்கள் பொது மருத்துவர்களை நாடாமல் அதற்கென்று உள்ள ஸ்பெஷலிஸ்டுகளை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது'' என்கிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அலர்ஜி ஸ்பெஷலிஸ்டான பஷீர் அகமது.

6 comments:

மங்கை said...

ஐயோ படிக்கவே பதறுதே..இதில் இரண்டு மருந்துகளை நான் என் ஆஸ்துமா பிரச்சனைக்காக பல ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்...

remove the word verification pls

யாத்ரீகன் said...

i feel very sorry for her, its a terrible thing that she's passing through.

but on a general thought, the side effects of Steroid medicines... aren't they just because of Dr's or the self prescription that we get directly from the pharmacy's...

துளசி கோபால் said...

மனசை அல்லாட வச்சுருச்சு(-:

FunScribbler said...

ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் இப்படிலாம் நடக்குது? இந்த டாக்டர்களை நம்பி போனால் இப்படி தான் ஆகுமோ.. ஒரு சிலரால் எல்லாம் டாக்டர்களுக்கும் கெட்ட பெயர். ச்சே....

தமிழச்சி said...
This comment has been removed by the author.
Sen22 said...

ரொம்ப பாவங்க...