Tuesday, February 5, 2008

மாடு மேய்க்கப் போகலாம் ''டுர், டுர்ரா....'' வழிகாட்டும் மனுதர்ம மத்திய, மாநில அரசுகள்.

அய்யய்யோ! சூத்திரன் கல்வி கற்றால் லோகம் எப்படி ஷேமமா இருக்கும்?'' என்று யாராவது பயந்து நடுங்கி இருக்க வேண்டும்। அறுபது எடு! இல்லன்னா கல்வியை விடு! என்று அறிவித்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு. அதாவது இனிமேல் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் ப்ளஸ்-டூ தேர்வில் அறுபது விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டுமாம். இல்லன்னா அவங்க தொழிற்கல்வி படிக்கும்போது ஸ்காலர்ஷிப் தர மாட்டாங்களாம். ''அப்படியா சொல்றீங்க? பேஷா செஞ்சிடுவோம்'' என்று சலாம் போட்ட பெரியாரின் பேரன் கருணாநிதி, சட்டக் கல்லூரி மாணவர்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு ஜகா வாங்கியிருக்கிறது. இதைத் ''திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மைய அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனால் இதுவரை தமிழகத்தில் என்ன நடமுறை இருக்கிறதோ, அதுவே தொடரும்'' என்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார்।

கடந்த செப்டம்பர் 24ம் தேதி பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் 2007-08 முதல் 2011-12ன் கீழ் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழிற்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறவேண்டுமானால் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதைத் தமிழக‌ அரசும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தலித் சமூகத்தின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழகம் முழுவம் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினார்கள், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்கள்.

''இது முழுக்க, முழுக்க அரசியல் சட்டத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு'' என்கிற சேலம் சட்டக்கல்லூரி மாணவரான சீனிவாசராவ், ''சமூக மற்றும் பொருளாதாரக் கல்வியில் மத்திய அரசு தலையிட வேண்டுமானால் எஸ்।சி/எஸ்.டி கமிஷன், தலித் அமைப்புக்களின் தலைவர்கள், மாணவப் பிரநிதிகள் ஆகியோரின் ஆலோசனை, அனுமதி பெற்றுத்தான் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவற்றை கவனிப்பதற்கென்றே பிரனாப் முகர்ஜி தலைமையில் கேபினெட் குழு இருந்தும் யாரிடமும் கேட்காமல் திட்டக்குழுத் துனைத் தலைவரான மாண்டென்சிங் அலுவாலியா தன்னிச்சையாக இந்த முடிவினை அறிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்த எஸ்.சி/எஸ்.டி கமிஷன் தலைவர் பூட்டாசிங்கிடம் இது குறித்து முறையிட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.

சிமெண்ட் விலையாகட்டும், நதிநீர்ப் பங்கீடாகட்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்ட பிறகே அரசு, முடிவுகளை அறிவிக்கிறது. மருத்துவக்கல்வியில் வெறும் நூறு, இருநூறு உயர்சாதி மாணவர்கள் கூக்குரலிட்டதற்கே பிரதமர்வரைத் தலையிடுகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் தலித்துக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் நோக்கில் செயல்பட்டுள்ளது வண்மையான கண்டனத்திற்கு உரியது'' என்கிறார்.

''புதுசாக எதுவும் செய்ய வேண்டாம்। இருக்கிற சலுகைகளை ஏன் பறிக்கிறாய்? என்றுதான் கேட்கிறோம். 722/1977ம் ஆண்டு சட்டப்படி எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வருமான உச்சவரம்பைக் கணக்கிலெடுக்காமல் முழுவதுமாக இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மற்ற மாநில அரசுகள் இதை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், 1997க்குப் பிறகு சிறு திருத்தம் கொண்டுவந்த தமிழக அரசு இதில் பாதியளவு கூட நடமுறைபடுத்தவில்லை. அதன்படி ஆண்டுக்கு நூறு கோடி என்று பார்த்தாலும் கடந்த பத்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு எங்களை வஞ்சித்துள்ளனர்.

எங்கப்பா ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. என்னால் மருத்துவக் கல்லூரிக்கோ, என்ஜினியரிங் கல்லூரிக்கோ பணம் கட்ட முடியாததால்தான் சட்டக்கல்லூரிக்கு வந்திருக்கிறேன். இதிலும் அறுபது மார்க் எடுத்தால்தான் ஸ்காலர்ஷிப் என்றால் எங்களைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்லாமல் சொல்கிறது அரசு'' என்கிறார் மதுரை சட்டக்கல்லூரி மாணவரான வையவன்.

''அறுபது சதவிகிதம் எடுத்தால்தான் ஸ்காலர்ஷிப் என்கிற அரசாங்கம் அந்தளவிற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்। இன்னும் எத்தனையோ கிராமங்களில் பள்ளிகளுக்கு கூரை இல்ல, கூரை இருந்தால் வாத்தியார் இல்ல. என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகப் பணம் கொடுப்பதால் 35% மார்க் எடுத்தாலே போதும், அவர்களுக்கு உயர்கல்வி கொடுக்கலாம் என்கிறது அரசாங்கம். அதாவது கொழுத்த பணக்காரர்கள் குறைந்த மார்க் எடுத்தாலே போதுமாம். ஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கிற தலித்துகளுக்கு அனுமதி இல்லையாம்.

எனக்கு அப்பாவுமில்லை, அம்மாவும் இல்லை. அவ்வப்போது பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று சட்டம் படிக்க வந்ததால்தான் இந்த விஷயங்களப் பற்றி பேச முடிகிறது. இல்லயென்றால் வறுமை காரணமாக எவன் சோறு போடுகிறானோ அவனுக்கு கூலிப்படையாகத்தான் இருக்க நேரும்'' என்கிறார் சென்னை சட்டக் கல்லூரி மாணவரான சுதாகர்.

பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவரான பேராசிரியர் சுக்தேவ் தோரட், ''அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் பட்டியல் இன மாணவர்களின் பயிற்சிக் கட்டணம் முழுமயாக திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்'' என்று பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பரிந்துரை செய்துள்ளார்। ஆனால், இருக்கிற சலுகைகளையும் பறித்துக்கொண்டு வயிற்றில் அடித்துள்ளது அரசாங்கம். தலித்துகளுக்கு 18% இட ஒக்கீடு இருந்தும், இந்த ஆண்டின் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே. ஏழ்மை காரணமாக மார்க் இருந்தும் அவர்களால் பணம் கட்டிப் படிக்க முடியவில்ல. 97ம் ஆண்டு தமிழக அரசின் திட்டச் செலவினம் நாண்காயிரம் கோடிக்குக் கீழ். 2007ல் இது 14 ஆயிரம் கோடியாகிவிட்டது. ஆனால் தலித் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை மட்டும் 97ல் எவ்வளவு இருந்ததோ அதுவே நீடிக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வருமாண வரம்பைச் சரிபார்க்க வேண்டுமென்று மத்திய அரசு கூறினாலும் இன்னும் ஐம்பதாயிரம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது தமிழகம். இது பிற்படுத்தப்பட்ட(mbc) சமூகத்திற்கு உள்ள உச்சவரம்பைவிட குறைவான தொகையாகும். தனியார் தொழிற்கல்லூரிகளில் இட ஒக்கீடு கேட்டுப் போராடிவரும் இந்த வேளையில், 'நீ படிக்க வந்தால்தானே இட ஒக்கீடு? பணம் இல்லயென்றால் பேசாமல் மாடு மேய்க்கப் போ, இல்லையென்றால் உன் குலத்தொழிலைப் பார்' என்று குறிப்பால் உணர்த்கிறது அரசாங்கம். இது உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.

''ஒரு சட்டத் திருத்தத்தில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்க வேண்டும்। அப்படி வரும்போது மாநில மக்களின் நன்மை கருதி அதை மறுக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரான தங்க.கலியபெருமாள் அதை முழுமனதோடு கையெழுத்திட்டு அனுப்புகிறார். அதை அரசு உடனடியாக செயல்படுத்தியிருக்கிறது. சில மாணவர்கள் கலியபெருமாளை நேரில் சந்தித்து ''என்ன சார் இப்படியெல்லாம் உத்தரவு போட்டிருக்கீங்க?'' என்று கேட்டிருக்கின்றனர். அதற்குக் கலி என்ன சொன்னது தெரியுமா? ''அப்படியா! நான் படிச்சே பாக்கலயேப்பா'' என்றதாம். மஞ்சத் துண்டு மைனரான முதல்வர் கருணாநிதி நவீன மனுதர்மராக மாறியதையே இந்த உத்தரவு கோடிட்டுக் காட்டுகிறது.

தலித்துகளின் பிரதிநிதியான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சினிமா கொட்டாயில் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் சத்தம் போட்டு அலற, அலறியடித்துக் கொண்டு ஓடோடி வந்து மைக் பிடித்துத் தன் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளார். அப்புறமேட்டு இவுரு சி.எம்.மைப் பாத்து கோரிக்க உட்டாராம். ''அட! உனுக்கு இல்லாததாப்பா? ஒடனே சென்ட்ரல் கவுர்மென்ட்டுக்கு லெட்டர் போடுறேம்ப்பா... நீ தெய்ரியமா இரு. ஆனா புலிங்கிள பத்தி மாத்திரம் பேசாத. எனுக்கு பயமா கீது''ன்னு கேட்டுக்கினாராம்.


''ஐய்... ஜாலி! ஜாலி!''ன்னு சொல்லிக்கிட்டே திருமா வந்த பிறகு ''திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மைய அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனால் இதுவரை தமிழகத்தில் என்ன நடமுறை இருக்கிறதோ, அதுவே தொடரும்'' என அறிவித்திருக்கிறார் குட்டைப் பாவாடை ஸ்ரேயாவை ரசித்தபடி கருப்புப் பணத்தை ஒழித்துக் கட்டிய பகாசுரன் ரஜினிக்கு எழுந்து நின்று விருது வழங்கிய கலைச் செம்மல் கருணாநிதி.

பலம் பொருந்திய பா.ம.க தமிழக அரசின் திட்டங்களை வெட்ட வெளிச்சமாக எதிர்க்கும்போது ''ஆமாம், நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம். அவர்களுக்காக ஆயுதம் கடத்த முடிந்தால் அதைப் பெருமையாகக் கருதுகிறோம்'' என்று கம்பீரம் காட்டும் திருமா, தி.மு.க அரசைக் கண்டித்து ஸ்காலர்ஷிப் விஷயத்தில் அரசான வெளியான அன்றே ஆர்ப்பாட்டம் செய்யாதது ஏன்?

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பு மட்டுமே. இன்றைக்கு அமலில் இருக்கும் இந்த மனுதர்ம உத்தரவுக்கு என்ன பதில் இருக்கிறது இவர்களிடம்? இவங்க கடிதம் எழுவாங்களாம், அவங்க படிச்சிப் பாத்துட்டு பதில் போடுவாங்களாம். அவரைக்கும்? அதுக்குள்ள ஜெயலலிதா முதல்வராயிடுவாங்க, திருமாவளவன் நடித்த புதுப்படமும் ரிலீஸ் ஆயிடும். அறுபது சதவிகிதம் மதிப்பெண்கள் என்பதை அனைவரும் மறந்துவிடுவார்கள். அதுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் மாடு மேய்க்கப் போகலாம் ''டுர், டுர்ரா....''

No comments: