Tuesday, February 26, 2008

மரணத்தின் பின் மனிதர் நிலை?

"தியானம்". இது மரணத்தைக் கடந்து அதற்குப் பிறகான மற்ற உலகங்களைப் பற்றியும், ஆத்மாவாகிய உயிர் இறுதியாக இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகிற வழித்தடங்களையும் மனிதனுக்கு காட்டக்கூடிய ஒரு உலகமாக இருக்கிறது. "நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிற கடமைகள், செயல்களினால் சிக்கியிருக்கும் மனம் தியானத்தின் பொழுது அதிலிருந்து விலகி மெல்ல... மெல்ல... ஒன்றுமற்ற ஒரே புள்ளியில் குவிகிற போது இந்த உண்மைகள் புலப்படும்" என்கிறார்கள் ஞானிகள்.

மரண பயத்திற்கு உட்படாத மனிதர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது. என்றைக்கு நிகழும் என்று நிச்சயிக்கப்படாத முடிவுகள் நிழல் போல் பின் தொடர்ந்த வண்ணம் மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் எல்லாவற்றின் மீதும் தீர்க்க முடியாத ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பயமும், வெறுப்பும் கொள்கிற போது சிலர் மரணத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கின்றனர். எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்வது ஒன்றே மகிழ்ச்சியானது என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் மரணம் தான் மகிழ்ச்சியானது என்பதாக தங்களின் உயிருள்ள போதே ஜீவ சமாதியடைந்த ஞானிகள் உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்(செத்தால்தான் நிம்மதி என்பது அவர்களின் நம்பிக்கை).

மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன? சொர்க்கமா, நரகமா? மறு பிறப்பு உண்டா? விவாதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இமையமலைக் குரு, பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர் 1936-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மும்பை ரீஜென்ட் ஓட்டல் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது விவரிக்க முடியாத ஒரு ஒளிக்கீற்று தியானத்திலிருந்து அவரை எழுப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே 10-ம் தேதி மார்ச் மாதம், பூரி ஆசிரமத்தில் புதைக்கப்பட்ட அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வரர் ரத்தமும், சதையுமாக எதிரில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார். நம்பமுடியாத அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

"இது நீங்களா?" என்று திகைத்துப்போன யோகானந்தர், பூரியின் கொடிய மணலில் புதையுண்ட அதே சரீரமா இது? என்று கேட்டபடியே சென்று யுக்தேஸ்வரரைக் கட்டியனைத்துக் கொள்கிறார்.

"ஆம். எந்த உடலை நீ புதைத்தாயோ! அதே ஸ்தூல உடல் தான். அதே போன்ற ஒரு சரீரத்தை இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களிலிருந்து படைத்தேன். இப்பொழுது நான் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பூவுலகில் அல்லாமல் ஒளி வடிவிலான சூட்சும உலகத்தில்" என்கிறார் ஸ்ரீ யுக்தேஸ்வரர்.

மெல்ல யோகானந்தரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சொல்கிறார்,

"இந்த மண்ணுலகில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு எப்படி மகான்கள் பிறப்பெடுக்கிறார்களோ! அப்படியே சூட்சும உலகில் உள்ளவர்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்து முக்தியடைந்து, அடுத்தபடியாக "ஹிரண்ய லோகம்' அடைய உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். ஹிரண்ய லோகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பூமியில் மரண காலத்தின் போது தங்கள் உடலை உணர்வுடனேயே விட்டுவிட்டவர்கள். சூட்சும உலகம் என்பது பூமியில் உள்ளவர்கள் இறந்த பின்பு வந்தடையும் ஒரு பிரதேசம்.

கடவுள் மனித ஆத்மாவை மூன்று சரீரங்களுக்குள் அடைத்து வைத்துள்ளார். இதில் எண்ணங்களால் ஆன 'காரண சரீரம்' முதன்மையானது. இரண்டாவது மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன 'சூட்சும சரீரம்'. மூன்றாவதாக புலன்களால் உணரக்கூடிய‌ சாதாரண 'ஸ்தூல சரீரம்' ஆகும். சமீபத்தில் உடலைவிட்டு பிரிந்த மனிதன், அதே போன்ற மனோபாவம் மற்றும் ஆன்மீகத் தன்மை உடைய ஒரு சூட்சும குடும்பத்தால் ஈர்க்கப்படுகிறான். சூட்சும உலகின் சராசரி ஆயுட்காலம் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள்.

மனிதனுடைய ஆத்மாவானது இறைவனின் முப்பத்தைந்து எண்ணங்களின் சேர்க்கை ஆகும். இதிலிருந்து பத்தொன்பது மூலப்பொருட்கள் அடங்கிய சூட்சும உடலையும், பதினாறு மூலப்பொருட்களை உள்ளடக்கிய ஸ்தூல உடலையும் உருவாக்கினான். ஸ்தூல உடலானது புலன்களின் மூலம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால் சூட்சும உடலோ ஒளிவடிவிலான அதிர்வலைகள் மூலம் தங்களின் ஆசைகளை, அனுபவங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இது ஒரு கனவு நிலைக்கு ஒப்பானது ஆகும். மேற்கூறிய இன்ப நிலைகளைக் கடந்த ஆத்மாவானது அடுத்ததாக காரண சரீரத்தில் வந்து நிற்கும். காரண உலகில் நினைத்த மாத்திரத்தில் எல்லா இன்பங்களையும் அடைய முடியும்.

ஒரு மனிதன் கற்பனையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் காரணவாசி நிஜத்திலும் செய்ய முடியும். ஸ்தூல உடல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிப்பது போல் மனதால் நினைத்தால் காரண உடலானது நிஜத்தில் பயணிக்கும். நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகள் என்பதே காரண உலகில் இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் தன் மனதை ஒருமுகப்படுத்தும் பேராற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் மண்ணுலகம், சூட்சும உலகம் ஆகிய இரண்டு உலகங்களின் முழுமையான பரப்பளவையும் 'ஒளிரும் பந்து வடிவிலான நிலையில்' வெளியிலிருந்து பார்க்கிறான்.அவற்றை தன் எண்ணங்களாகவும் மாற்றிக் காண்கிறான். ஒருவன் கண்ணை மூடிக்கொண்ட பின்னரும் இடங்களைப், பொருட்களை காட்சிகளை எப்படி எண்ணத்தினால் உணர்கிறானோ அப்படியே இது சாத்தியமாகும்.

சூட்சும் உலகில் நீடித்து வாழ்வதற்கு மனிதன் தன் மண்ணுலகக் கடமைகள், இச்சைகளை முழுவதுமாக தீர்த்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தங்கள் வினைக் கடன்களைத் தீர்க்க வேண்டியவர்கள் மீண்டும் ஸ்தூல உடலில் பிறப்பெடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மண்ணுலக கர்மாக்களை தீர்க்காதவன் சூட்சும உலகில் வந்து மரணமெய்தும் போதும் எண்ணங்களால் ஆன காரண உலகில் அனுமதிக்கப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் இவர்கள் ஸ்தூல மற்றும் சூட்சும உலகிலேயே அலைந்து கொண்டு இருப்பார்கள். பக்குவமடையாத மனித ஆத்மா இப்படியான மூன்று சரீர பந்தங்களிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணற்ற பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது.

இச்சைகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவானது மூன்று சரீரக் கூடுகளிலிருந்தும் வெளியேறுகிற போது தான் அதன் தனித் தன்மையை இழக்காமல் பரமாத்மாவுடன் இனைந்து விடுகிற நிலை ஏற்படும். மண்ணுலகில் இருக்கும் போதே இந்த மூன்று நிலைகளையும் மனிதன் உணர்ந்து இருக்கிறான். புலன்கள் வழியாக தொடும் பொழுதோ, ருசிக்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ ஸ்தூல உடலில் செயல்படுகிறான். கற்பனை செய்யும் பொழுதும், கனவுகளில் லயிக்கும் பொழுதும் சூட்சும சரீரத்தில் செயல்படுகிறான். எண்ணங்களால் வாழும் பொழுதும், தியானத்திலும் காரண சரீத்தில் செயல்படுகிறான்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் பதினாறு மணி நேரம் ஸ்தூல உடலில் சஞ்சரிப்பான். எஞ்சியுள்ள நேரத்தை தூக்கத்தில் செலவிடும் பொழுது கனவுகளின் மூலம் சூட்சும சரீரத்தை அடைகிறான்.அங்கே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறான். அவனுடைய நித்திரை கனவுகளற்று ஆழ்ந்து இருக்கையில் தன் உணர்வை அதாவது 'நான்' எனும் உணர்வைக் கடந்து காரண உலகத்தில் வாழ்கிறான். கனவு காண்பனுடைய நித்திரை களைப்பில் ஆழ்கிறது. மாறாக தன்னை மறந்து காரண சரீர நிலை எய்தும் உடலானது புத்துணர்ச்சி பெறுகிறது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் கூற்றின்படி மனித ஆத்மாவானது அழிவில்லாத ஒன்று. ஆற்றலை எப்படி ஆக்கவோ, அழிக்கவோ முடியாதோ அதே நீதிப்படி இறைவனது எல்லா படைப்புகளும் உள்ளன. அது ஒன்றிலிருந்து வேறொன்றாக, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாக உள்ளது. எல்லாவற்றின் இறுதி நிலையும் அவனிடமே வந்து அடங்குகின்றன. அங்கு இன்பத்தை தவிர வேறெதுவுமில்லை. மனிதனைப் பொறுத்த அளவில் மனம் தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கும் சக்தி படைத்ததாக இருக்கிறது. அதை தியான‌த்தின் மூலம் ஒருமுகப்படுத்தி செயல்படுகிற போது பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணர முடியும்.

தியானம் என்பது என்ன?

தியானம் என்பது ஒரே வரியில் சொல்வதென்றால் பிரபஞ்சத்தோடு நம்மை இனைத்து வைப்பது அல்லது உணர வைப்பது என்று சொல்லலாம். மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

அடிப்படையில் மேல் மனம், அடிமனம், ஆழ்மனம் என்று மனமானது மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களின் வழியே புற விஷயங்களை நாம் உணர்ந்தவாறு இருக்கிறோம். இவை அனைத்தும் மேல் மனத்தினால் உணரப்பட்டு அடிமனத்தினோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது.

ஆனால் ஆழ்மனம் என்பது பெரும்பாலும் சராசரி மனிதர்களால் உணரப்படாமலே இருக்கிறது. எண்ணத்தின் அடிப்படியிலான அத்தனை தகவல்களும் இறுதி மூச்சு உள்ளவரை ஆழ்மனத்தினால் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மறந்து போன தகவல்களைக் கூட மெஸ்மரிசம் மூலம் மருத்துவர் கண்டறிந்து சொல்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஒரு நபர் ஈடுபடும் போது மேல்மனம் அதை மறைக்கப்பட்ட விஷயமாக நம்ப வைத்தாலும் ஆழ்மனம் அதை ஏற்பதில்லை. தவறென்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஆழ்மனத்தோடு தொடர்புடையவர்கள் தகாத செயல்களில் ஏடுபடுவதற்கான வாய்ப்பையே அளிக்காமல் ஆழ்மனமானது கடிவாளம் போட்டவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே செயல்கள் நல்வழிபடுத்தப்பட்டு வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக மாறுகிறது.

ஐம்புலன்களின் எந்த தூண்டலுக்கும் உள்ளாகாதவாறு மனதை ஒரே புள்ளியில் குவித்து தியானம் செய்வதால் டென்ஷன், படபடப்பு, கோபம், வெறுப்பு முதலிய வேண்டாத பிரச்சினைகள் தூக்கி எறியப்படுகின்றன. மனம் எப்பொழுதும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் அதே சமயம் கூர்மையான நினைவாற்றலுடன் இய‌ங்க‌ ஆர‌ம்பிக்கிற‌து.

கடவுளின் பின்குறிப்பு.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள். டாஸ்மாக் பாரில்கூட நீங்கள் தியானம் செய்ய முடியும். நான் சந்தோஷமாக இருந்தாலும், துக்கத்தில் இருந்தாலும் அங்குதான் போவேன். போதுமான சரக்கடித்த பின் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கமான் ச்சியர்ஸ்.

3 comments:

நிகழ் பிடித்தான் பாவைபிரியன் said...

hello!
you are publishing a very useful and interesting matters. It is most useful to all humanbeings. This facts are most probable true for my concern.
Then last paragraph why you tell about tasmark? Is it Joke?
thanks.
paavaipriyan

நான் கடவுள் said...

நல்ல மனிதர்களை நான் கடவுளாகத்தான் பார்க்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது என்னுடைய கருத்து அல்ல. ஒரு பார்வையாளனாக என்னால் அந்த விஷயங்களுக்குள் ஊடுருவ முடிந்தது. உணர முடிந்தது, ரசித்தேன். இமயமலைக்குத்தான் போகவேண்டும் என்று யாரையாவது தூண்ட வேண்டுமா என்ன? அதனால்தான் வண்டியை டாஸ்மாக்கிற்கு திசை திருப்பிவிட்டேன். மது அருந்துவதைத்தான் நான் டாஸ்மாக் என்றேன். ஆனால், அந்த மானங்கெட்ட தமிழ்நாட்டு பார்களைச் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

உங்களுக்கு அந்தப் பரவசத்தை அளிப்பது மட்டுமே என்னுடைய நோக்கம். அங்கேயே அடிமையாய்க் கிடத்துவது அல்ல. அதனால் திசை திருப்பிவிட்டேன். உங்களுக்கும் அதே நிகழ்ந்திருக்கிறது.

நன்றி. விவாதிப்போம்.

jana said...

migaa neenda nalaku piragu oru nalla blog padiththa thirupthi sir/ayya