Friday, May 23, 2008

சாதியில் சிக்கிய கார்பரேட் நிறுவனங்கள்! -அழகு பார்த்தும் ஆள் பிடிக்கின்றன.


‘‘சூப்பரா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணத் தெரிஞ்சிருந்தா, அது கழுதையா இருந்தாலும் உடனடியா அப்பாயிண்ட்மென்ட் குடுத்துருவாங்க’’ கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி வேலைக்கு ஆள் எடுக்கின்றன? என்று பேராசிரியர் பெரியர்தாசனிடம் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

நாமும் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்களை நியமனம் செய்யும் போது சாதி பார்க்கின்றன, மதம் பார்க்கின்றன என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு.

நியூயார்க் சிட்டி பல்கலைக்கழக் பேராசிரியர் 'பால் அட்டிவெல்' மற்றும் பிரின்ஸ்டன் பல்கலை பேராசிரியரான 'கேத்ரின் நியூமென்' ஆகியோர் இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் 'சுக்தேவ் தோரட்' உதவியுடன் 2005-ம் ஆண்டு தொடங்கி இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் மேற்கொணட ஆய்வானது ‘‘தலித்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோர் பணியாளர் தேர்வின் போது திட்டமிட்டு ஒதுக்கப்படுகின்றனர்" என்று தெரிவிக்கிறது.

"நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட 4,808 விண்ணப்பங்களில் நேர்காணலுக்கான வாய்ப்பு என்பது உயர் சாதி விண்ணப்பதாரர்களைவிட தலித்துகளுக்கு 66 சதவிகிதமும், முஸ்லிம்களுக்கு 33 சதவிகதமும் இருந்தது. நேர்காண‌லில் கல்வி மற்றும் துறை சம்பந்தமான கேள்விகளைத் தவிர்த்துவிட்டு குடும்பப் பின்னணி, பெற்றோர்கள் பார்க்கும் வேலை பற்றியே கேட்கப்பட்டன.

டில்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான பித்யூத், ‘இவ்வளவு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவருக்கு எப்படி வேலை தரமுடியும்? என்று இன்டர்வியூவின் போது என்னிடம் கேட்டார்கள். இட ஒதுக்கீடு தொடர்பாக விமர்சனம் செய்து என்னை வெளியே அனுப்பினார்கள். ஒரு தலித்தை வேலைக்கு வைத்துக்கொள்ள அந்த நிறுவணம் விரும்பவில்லை’ என்று கூறியதாக ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.

2000-ம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்காக விஜயபாஸ்கர் எனும் பொருளாதார நிபுணர் மேற்கொண்ட ஆய்வில் ‘‘பெங்களூர் மற்றும் டில்லியில் உள்ள சாஃப்ட்வேர் என்ஜினியர்களில் 80 சதவிகிதம் பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்’’ என்று குறிப்பிடுகிறார்.

பெங்களூர் உயர்கல்விக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கரோல் உபாத்யாயா, ஏர்.ஆர்.வாசவி ஆகியோர் ‘‘தகவல் தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் பெரும்பாலும் நகரின் தலை சிறந்த கல்லூரிகளில் படித்த, நடுத்தரக் குடுமபத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அதில் 71 சதவிகிதம் பேர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்’’ என்று தாங்கள் மேற்கொண்ட‌ ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

"பிராந்திய அல்லது மொழி அடிப்படியிலான பாரபட்சத்துடனே ஊழியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்’’ என்று கூறும் வரலாற்று ஆசிரிரியரான ராமச்சந்திர குஹா, ‘‘ஒரு மலையாளி இன்னொரு மலயாளியையும், பஞ்சாபி இன்னொரு பஞ்சாபியையும்தான் நம்புகிறார்’’ என்கிறார்.

‘‘போதிய வேலைவாய்ப்புகளையும் அரசு நிறுவனங்களைவிட அதிக சம்பளமும் அளித்துவரும் தனியார் நிறுவனங்கள் தலித்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது காட்டும் இந்த பாரபட்சமானது, இம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் சீரழித்துவிடும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த ஆய்வின் அடிப்படையில் சென்னையில் இருக்கும் தகவல் தொடர்பு நிறுவன வட்டாரங்களில் வலம் வந்த போது, ‘‘இங்கே சாதி மட்டுமல்ல அழகையும் பார்த்துத்தான் ஆள் பிடிக்கிறார்கள்’’ என்கிற அதிர்ச்சித் தகவல் நமக்காக காத்திருந்தது.

வேறு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்க்க மாட்டார்கள் என்பதால் பெயர் வேண்டாம் என்றபடி சிலர் பேசினார்கள்.

தென் மாவட்டத்திலிருந்து சென்னையில் செட்டிலாகிவிட்ட தலித் மாணவி அவர். ‘‘வாகணத் தயாரிப்பில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டிருக்கிறேன். நேர்முகத் தேர்வின் போது என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெளியே அனுப்பினார்கள். நான் ஒரு தலித்தாகவும், அழகு குறைவாகவும் இருந்ததே அதற்கு காரணம்.

எங்களோடு வந்திருந்த ஒரு பெண், பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகாக இருந்தாள். ஐந்து அரியர்ஸ் வைத்திருந்தபோதும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த என்னைப் புறக்கணித்துவிட்டு அவளைத் தேர்வு செய்தார்கள்.
தேர்வின்போது விடைத்தாளில் போட்டோ ஒட்டச் சொன்னதாக இதுவரை சரித்திரமே இல்லை. ஆனால் அழகான பெண்களை செலக்ட் செய்வதற்காக வேண்டி அதையும் கேட்டிருந்தது ஒரு நிறுவனம்.

இன்னொரு நிறுவனத்தில் என்னுடைய சர்டிபிகேட்டுகளைப் பார்த்துவிட்டு ‘நீங்கள் ஏன் எல்லா விளையாட்டிலும் கலந்து கொண்டீர்கள்? என்று கேட்டார்கள். ‘ஆர்வம் இருந்தது’ என்று சொன்னேன். ‘பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லை’ என்று வெளியே அனுப்பிவிட்டார்கள். நான் ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டியாக இருப்பதால் கம்ப்யூட்டரை காலால் எட்டி உதைத்துவிடுவேனா என்ன?’’ என்று கேட்கிறார் அப்பெண் நம்மிடம்.

சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் என்ஜியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர், ‘‘மல்டிநேஷனல் கம்பெனி ஒன்றிற்கு அப்ளிகேஷன் போட போயிருந்தேன். இரண்டாவது மாடிக்கு செல்ல வேண்டும். எனக்கு காலில் அடிபட்டிருந்ததால் என்னுடைய க்ளாஸ்மெட்டிடம் கொடுத்து அனுப்பினேன். என்னுடைய போட்டோவைப் பார்த்துவிட்ட நிறுவனத்தின் மனிதவள அதிகாரி(இளம்வயது) ஒருவர் என்னைத்தேடி சாலைவரை வந்துவிட்டார்.

‘நீங்க எதிர்பார்க்கிற சம்பளம், எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா எல்லாம் உண்டு’ என்று வழிய ஆரம்பித்துவிட்டார். எனக்கே தெரியும், ஆட்டிடியூட் எக்ஸாமில்கூட என்னால் பாஸாக முடியாது என்று. என்னிடம் முகத்தைப் பார்த்துப் பேசாமல் வேறு இடங்களில் பார்த்து பேசியதிலிருந்தே என்ன குறிக்கோளுடன் வந்திருக்கிறான், அழகை ஒரு ஸ்கேலாக வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். வீட்டுக்கு வந்த பிறகும் விடவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் செல்போன் மூலமாக வழிந்தவர்,

‘கேள்விகள் எல்லாவற்றையும் உங்களுக்கு கொடுத்துவிடுகிறேன். அதை மட்டும் நீங்கள் படித்துவிட்டு வந்தால் போதும். செலக்ஷன் கமிட்டியில் நான்தான் இருப்பேன், யூ ஆர் அப்பாயிண்டெட் என்று சொன்னார். வெறும் திறமைக்கு மட்டும் இங்கே மதிப்பில்லை’’ என்கிறார் அந்த‌ப் பெண்.

அதே கல்லூரியில் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவணம் நடத்திய கேம்பஸ் இண்டர்வியூ பற்றிச் சொல்லும் ஒரு கல்லூரியின் மாணவிகள் ‘‘ஆன்லைன் மூலமாக அறை ஒன்றுக்கு நாற்பது கம்ப்யூட்டர்கள் வீதம் 525 மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தோம். அழகான மாணவி ஒருவர் தோற்கப்போவதை அறிந்த நிர்வாகிகள், குறிப்பிட்ட அந்த அறைக்கு மட்டும் பவர்கட் செய்தார்கள். இதன் மூலம் அவள் ஒருத்திக்காக நாற்பது பேரையும் செலக்ட் செய்தார்கள். பின்னர், வாய்மொழித் தேர்வில் மீதி 39பேரும் வீட்டுக்கு அனுப்பட்டார்கள். இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேணுமா?’ என்று கேட்கிறார்கள்.

சல்லடை போட்டும் ஒரு முஸ்லீம் பணியாளர்கூட நமக்கு கிடைக்காததால் இது குறித்து த.மு.மு.க தலைவரான ஜவாஹிருல்லாவிடம் பேசிய‌போது, ‘‘பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் அமைக்கப்பட நீதிபதி ராஜேந்திரசச்சார் கமிட்டியின் ஆய்வறிக்கையிலேயே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தலித்துகளும், முஸ்லிம்களும் புறந்தள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது’’ என்றார் அவர்.

‘‘கார்பரேட் நிறுவனமாகட்டும், கமர்கட் கடையாகட்டும் தனியார்களைப் பொறுத்தமட்டில் லாபம் ஒன்று தான் குறிக்கோள். லாபம் என்று தெரிந்தால் தனக்கான சவக்குழியை தோண்டிக்கொள்ளக்கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்" என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஜாதி, மத அபிமானமெல்லாம் ஐ.டி.நிறுவனங்களுக்குக் கிடையாது. எல்.கே.ஜி.யிலிருந்து ஐ.ஏ.எஸ் வரை ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார்கள். ஆனால் தலித்துகளுக்கு அப்படி யாரும் கொடுப்பதில்லை.

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் என்னை ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளியில் பாடம் நடத்த விருப்பம் தெரிவித்து அனுமதி கேட்டபோது உள்ளேவிட மறுத்துவிட்டார்கள். உயர்சாதி மாணவர்களைவிட கூடுதல் தகுதி இருந்தும் தலித்துக்களும் கிராமப்புற மாணவர்களும் கேம்பஸ் இண்டர்வியூவில் தோற்றுப்போகக் காரணம் தயக்கம் மட்டுமே. அது களையப்பட வேண்டும்’’ என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்.

சாதி பார்த்தும், அழகு பார்த்தும் வேலைக்கு எடுப்பதாக சொல்லப்படும் இக்குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கும் கார்பரேட் நிறுவனங்கள், ‘‘தகுதி குறைவால் வெளியேற்றப்பட்டவர்கள் திட்டமிட்டுத் தங்கள் மீது தாங்களே பூசிக்கொள்ளும் அடையாளங்கள் இவை" என்கிறார்கள்.

‘‘சாதீய அடிப்படையிலான இந்தியச் சமுதாயம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துக்கொண்டிப்பது அந்நிய முதலீட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. நகர்ப்புற மாணவர்களோடு ஒப்பிடும்போது கிராமங்களில் இருந்து வருபவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருப்பவர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு போதும் தகுதி குறைந்தவர்களாக இருக்க மாட்டார்கள். மீண்டும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டியதன் அவசியத்தையே இத்தகைய பாரபட்சமான அனுகுமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன’’ என்கிறார் மனித உரிமைப் போராளியும், பேராசிரியருமான பிரபா.கல்விமணி.

1 comment:

மிதக்கும்வெளி said...

தேவையான கட்டுரை