Saturday, April 12, 2008

காலை வெட்டிய சவுதி அரேபியா! -கண்ணீரில் சதீஷ்பாபு.


''நீ இந்துவா முஸ்லிமா? முஸ்லிம் தவிற யாருக்கும் இங்க ட்ரீட்மென்ட் கிடையாது. உன் கால் அழுகிப் போறதுக்குள்ள காசு வேண்டாம்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு ஊருக்கு ஓடிப்போ''
-எலும்பு நொறுங்கிய நிலையில் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த இந்திய இளைஞன் ஒருவனை இப்படியாக விரட்டியடித்திருக்கிறது சவுதி அரேபிய அரசு.
''மனிதாபிமானம்னா என்னன்னே தெரியாத நாடு சவுதி அரேபியா. எத்தனை ஜென்மம் ஆனாலும் என் பாவம் அவங்களைச் சும்மா விடாது'' என்று கண்ணீர் வடிக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சதீஷ்பாபு.

சதீஷ்பாபுவுக்கு வயது 28. மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்கிறார். இன்னும் கல்யாணமாகவில்லை. நகையை விற்று, வட்டிக்கு கடன் வாங்கி ஆயிரமாயிரம் கன‌வுகளுடன் விமானம் ஏறினார். பிறகு...

''சவுதிக்கு போகப்போறோம்னு தெரிஞ்சவுடனே, முதல்ல வீட்டுக் கடனையெல்லாம் அடைச்சிடனும். திரும்பி வந்ததும் ஊரே மெச்சுற‌ மாதிரி செக்கச் செவேல்னு ஒரு பொண்டாட்டி. அவளுக்குன்னு ஒரு அழகான வீடு. என் குழந்தைங்க, ''பசியா? அப்டின்னா என்ன?''ன்னு கேக்கணும். இன்னும் என்னவெல்லாமோ கனவு கண்டுட்டு இருந்தேன். ஆனா, என்னோட ஒரு காலை இழந்து, இப்போ ஊணமா நிக்கிறேன். இதுக்கெல்லாம் காரணம்? மனிதத் தன்மையே இல்லாத சவுதி அரேபியாதான்'' என்று சபிக்கும் சதீஷ்பாபு, தொடர்ந்து தன் சோகத்தைச் சொல்கிறார்.

''2005, நவம்பர் மாசம். சவுதியில் இருக்கிற எங்க சித்தப்பா மூலமாத்தான் நான் வேலைக்குப் போனேன். அல்ஜூப் நகர் பக்கத்துல 'சகாகா'ங்கிற இடத்துல‌ அவர் பஞ்சர் கடை வச்சிட்டிருந்தார். அவருக்கு பழக்கமான 'மெத்தான்'ங்கிறவர்தான் எனக்கு ஹவுஸ் டிரைவர் விசா கொடுத்திருந்தார். இதுக்காக மாசம் 1,200 ரூபாயை மெத்தானுக்கு நான் கொடுத்தாகணும். இந்த விசாவை வச்சுக்கிட்டு நாம‌ வேறெங்க‌யாவது வேலை பாத்துக்கலாம்.
வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி ஒவ்வொரு ஏரியாவா வேலை பாத்ததுல மாசம் பத்தாயிரம் சம்பாதிக்க முடிஞ்சது. அப்போ நான் சந்திச்ச அனுபவம் இருக்கே... 'சோத்துக்கு வழியில்லைன்னாலும் சொந்த ஊருக்கு எந்த ஊரும் ஈடாகாது'ங்கிற உண்மை தெரிஞ்சது.

அங்க வேலை செய்யப் போறவங்களுக்கு 'மஜிரா, ராய்க்கணம்'னு ரெண்டு விசா இருக்கு. 'மஜிரா'ன்னா ஈச்சம்பழம் பறிக்கிறது, தோட்ட வேலை பாக்கிறதுன்னு விவசாய விசா. 'ராய்க்கணம்'னா ஒட்டகம், ஆடு மேய்க்கிறது. தப்பித் தவறிகூட யாரும் இந்த வேலைக்கு வந்துடக்கூடாது. இவங்களுக்கு தோட்டத்துல ஒரு துணி கூடாரம் போட்டுத் தநதுடுவாங்க. அதுலதான் படுத்துக்கணும். ஒட்டகததுக்கு வைக்கிற தண்ணியைதான் குடிச்சிக்கணும்.

எங்கள மாதிரி ஆளுங்களை ஒரு அடிமையாத்தான் அரபு ஷேக்குங்க நடத்துவாங்க. காரணமே இல்லாம அடி, உதை விழும். எதுத்துப் பேசிட்டோம்னா, 'இஸ்லாத்தைத் தப்பாப் பேசிட்டான்'னு சொல்லி பள்ளி வாசலுக்கு இழுத்துட்டுப் போயிடுவாங்க.
இலங்கையிலிருநது வந்திருந்த காண்டீபனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படி கூட்டிட்டுப் போய் சவுக்கால அடிச்சாங்க. ஒரு ஆள் எந்த ஊர்னே தெரியலை. அவரைக் காருக்குப் பின்னாடி வச்சுக் கட்டி, தரதரன்னு ரோட்ல இழுத்துட்டுப் போகும்போது எங்களால அழக்கூட முடியல. தஞ்சாவூர்காரர் ஒருத்தர். அங்கிருந்த பெட்ரோல் பங்க்கில் வேலை பாத்துட்டு இருந்தார். யாரோ அவர்கிட்ட கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாத்திட்டுப் போய்ட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அதே ஆளுங்க பெட்ரோல் போட வந்தப்போ, இவர் அவங்களை பிடிச்சுக் கொடுததுட்டார். மறு நாள் துப்பாக்கியோட திரும்பி வந்தவங்க, அவரோட தோள்பட்டையிலும், தொடையிலும் சுட்டுட்டுப் போய்ட்டாங்க. இதையெல்லாம் பார்த்த நம்மாளுங்க எது நடந்தாலும் வாய் திறக்கிறதே இல்லை.

ரோட்ல நாம நடந்து போகும்போது பக்கத்துல கார் வந்து நின்னுச்சின்னா ஓடிப் போயிரணும். ஏன்னா, கையில லத்தியை வச்சிக்கிட்டு ஓங்கி அடிக்கிறது அங்குள்ள பணக்காரங்களுக்கு பொழுதுபோக்கு. ஸ்கூல் படிக்கிற சின்னப் பசங்க? பலூன் நிறைய மூத்திரத்தைப் பெஞ்சு வச்சுக்கிட்டு நம்மாளுங்க வரும்போது மூஞ்சியில வீசியடிப்பானுங்க. அதேபோல முட்டையை வீசுறதும் அவங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு. நாம ஷாட்ஸ், கைலி எல்லாம் போட்டுகிட்டு நடநது போனா அதையும் அவுததுப் போட்டு அவமானப்படுததுவானுங்க.
'முத்தப்பா'ன்னு தாடி வச்சக் கூட்டம் ஒண்ணு அப்பப்போ ரோந்து வரும். போலீஸைவிட இவங்களுக்குத்தான் பவர் ஜாஸ்தி. யாராவது பிரச்னைல மாட்டியிருந்தா, உடனடியா அவங்களை இஸ்லாத்துக்கு மாறச்சொல்லி கட்டாயப்படுததுவாங்க. இல்லைன்னா தண்டனை கடுமையா இருக்கும்.
இந்தியா ஆளுங்கன்னா 'நீ இந்துவா?'ன்னு கேட்ட பிறகுதான் விசாரனையே ஆரம்பிப்பாங்க. இதனாலயே பலர் சும்மா பேருக்கு முஸ்லிமா மாறிட்டு ஊருக்கு வந்தப்புறம் இந்துவாகிடுவாங்க. ஒரு லட்சம் கடனை வாங்கிட்டு சம்பாதிக்க வந்திருக்கேனே... அதையாவது திருப்பி அடைக்கணுமேன்னு கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சேன்.

ரெண்டு வருஷம் கழிச்சு நானும், என் ஃபிரண்ட் கமுதி ராமசாமிப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரமும் சேர்நது 'சகாகா'வுலயே சொந்தமா பஞ்சர் கடை ஒண்ணு போட்டோம். இதை என்னோட கஃபில்(முதலாளி) மெத்தான்கிட்ட யாரோ போட்டுக் கொடுத்துட்டானுங்க. அந்தாளு வந்து, ''சொந்தமா கடை வச்சிருக்கியா? மாசம் மூவாயிரம், வருஷத்துக்கு இருபத்தஞ்சாயிரம் கமிஷன் கொடுத்தாத்தான் உன்னோட 'இக்காமா'வை(அடையாள அட்டையை) ரெனிவல் பண்ணுவேன்'னு மிரட்டினார்.
இது சம்பந்தமா 'சகாகா' வந்திருந்த இந்திய தூதரக அதிகாரிகள்கிட்ட சொன்னப்போ, 'இதையெல்லாம் நீங்கதான் பேசித் தீர்ததுக்கணும். பாஸ்போர்ட் ரெனிவல் பண்றது மட்டும்தான் எங்களோட வேலை'ன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம மாசம் ரெண்டாயிரம் கொடுக்கறேன்னு ஒத்துக்கிட்டு தொழிலைப் பாத்துக்கிட்டிருந்தேன்.

போன மாசம் 21-ம் தேதி காலைல வாட்டர் சர்வீசுக்காக ஒரு கார் வந்து நின்னது. அதை ரிவர்ஸில் எடுக்கச்சொல்லிக் கை காமிச்சிட்டு இருந்தப்போ, பிரேக்கை மிதிக்கிறதுக்குப் பதிலா, அவன் ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டான். கார் வேகமா வநது மோதினதுல எனக்கு கால் உடைஞ்சிருச்சு. உடனடியா அங்கிருந்த ஜி.எச்.ல என்னை அட்மிட் பண்ணாங்க.
'ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கு, வாஸ்குலர் சர்ஜரி பண்ணனும். அதுக்கு ஆஞ்சியோகிராம் மெஷின் இங்க இல்லை. வேற ஹாஸ்பிட்டல் பாததுக்கங்க'ன்னு சொல்லிட்டாங்க. பக்கததுல உள்ள 'தபுக்' ஏரியாவில் அந்த வசதி இருந்தது. ஆனா, முஸ்லிம்களை மட்டும்தான் அட்மிட் பன்ணுவோம். வேற யாருக்கும் அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஜி.எச்.சில் இருந்த டாக்டர், 'சீக்கிரமா நீ இந்தியாவுக்கு போனாத்தான் உன் காலைக் காப்பாத்த முடியும்'னு சொல்லிட்டார். லோக்கல் போலீஸ்காரங்க வந்து, 'இந்தியா போகணும்னா மேற்கொண்டு இழப்பீடு கேட்க மாட்டேன், வழக்குத் தொடர மாட்டேன்னு கையெழுத்துப் போட்டாத்தான் உங்களை விடுவோம்'னு மனிதாபிமானமே இல்லாம பேசினாங்க.
நஷ்ட ஈட்டுக்காக காலையா இழக்க முடியும்? நன்பர்களோட உதவியால சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ்'ல எனக்கு மட்டும் நாலு சீட் ரிசர்வ் பண்ணேன். அப்போதான் காலை நீட்டி சவுகர்யமா வச்சுக்க முடியும். போன 26-ம் தேதி காலைல 9-மணிக்கு 'அல்ஜூஃப்'ல இருந்து கிளம்பி 10-மணிக்கு ரியாத் வநது சேர்ந்தேன். அங்கிருநது சென்னைக்கு நடு ராத்திரி 1.30-மணிக்குத்தான் ஃபிளைட். இதுக்கிடையில் பதினஞ்சு மணி நேரம் நான் பட்ட கஷ்டம் இருக்கே... இப்போ நினைச்சாக்கூட நடுங்குது.
காலை நீட்டி உக்காரக்கூட அனுமதிக்கலை. அங்க என்னைக் கேட்ட முதல் கேள்வி, 'நீ இந்துவா? முஸ்லிமா?'ங்கிறதுதான். 'இந்து'ன்னு சொன்னவுடனே, 'வெளியே போடா நாயே!'ன்னு துரத்தி விட்டுட்டாங்க. உதவிக்கு யாருமில்லை. ஒண்ணுக்குப் போகக்கூட வழியில்லாம நான் பட்ட கஷ்டம்? காலை நீட்டி வைக்காம தொங்கப் போட்டதால வலி உயிர் போச்சு.
உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் பண்ண‌‌வனுக்குத்தான் ஆண்டவன் அப்படியொரு வலியைத் தருவான். பதினஞ்சு மணி நேரம்ங்கிறது எத்தனை நொடியோ, அத்தனை நொடியும் உயிர் போகிற வலியை அனுபவிச்சேன்.

ஒரு வழியா சென்னை வநது அப்பல்லோ ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன். ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தா காலை காப்பாத்தி இருக்கலாம்னு சொல்லிட்டாங்க. நாலு டிக்கெட் ரிசர்வ் பண்ணதுக்கு 60 ஆயிரம் ஆச்சு. இங்கே என் காலை வெட்டியெடுக்க 1 லட்சத்து நாப்பதாயிரம் கொடுத்திருக்கேன்.
நஷ்ட ஈடு எதுவும் கேட்க மாட்டேன்னு சவுதி போலீஸ்காரங்க‌ கட்டாயப்படுத்தக் கையெழுதது வாங்கிட்டாங்க. இதுக்கெல்லாம் யார் பொறுப்பு? என் வாழ்க்கையோட எதிர்காலத்துக்கு யாராவது உதவுவாங்களா? எந்த பதிலும் எங்கிட்ட இல்லை. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்வேன். பிச்சையெடுத்தாலும் உள்ளூர்ல‌யே எடுங்க‌. வெளிநாட்டு வேலைக்குப் போய் மோசம் போய்டாதீங்க'' &கண்களில் விரக்தியுடன் சொல்லி முடித்தார் சதீஷ்பாபு.

அப்பல்லோ உள்ளிட்ட இந்திய மருத்துவமனைகளுக்கு நீண்ட பைஜாமாவும், நீண்ட தாடியும் வைத்த அராபிய ஷேக்குகள் தினந்தோறும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

Saturday, April 5, 2008

அலங்கோலமாக்கிய அலர்ஜி -இளம்பெண்ணின் கண்ணீர் கதை.


லர்ஜி வந்தால் ஆளே அசிங்கமாகி, கால்கள் செயலிழந்து, மூச்சுவிட முடியாமல் மரணத்தை நோக்கிக் காத்திருப்பீர்களா? நிச்சயமாக! அது உங்கள் மருத்துவரைப் பொறுத்தது. சாதாரண 'டஸ்ட் அலர்ஜி' அழகான இளம்பெண் ஒருவரை அநியாயத்திற்கு அலங்கோலமாக்கி வாழ்வையே நாசமாகிவிட்ட கதை இது.

பிரியா ஒரு பி.ஏ. பட்டதாரி, வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. எல்லாப் பெண்களைப் போலவே இளமையாய், கனவுகளோடு நெய்வேலி அனல்மின் நிலையக் குடியிருப்பில் தன் அப்பா செல்வராஜ், தாய் எப்சி மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.

அப்படியரு கோலத்தில் பிரியாவைப் பார்த்தபோது மனசுக்கு ரொம்பவே சங்கடமாய் இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், தெருக்களில் தேங்கி நின்ற தண்ணீர் சாக்கடையாய் மாறியிருந்தது. தவழ்ந்து வந்ததால் பிரியாவின் உடைகளும் சேரும் சகதியுமாய் காட்சியளித்தது. ஊணமுற்றவர்களிலேயே இப்படிப்பட்டவர்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள்.

''தம்பி, தங்கச்சி பேரைப் போட்றாதீங்க. நான் இன்னைக்கோ, நாளைக்கோ... சாவப்போற கட்டை! என்னால அதுங்களுக்கு அசிங்கம் வரக்கூடாதில்ல... அதான்'' என்றபடி புன்னகை தவழ ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.
''யாருங்க இது?'' என்றேன். ''நான்தான் சார்! நல்லா இருக்கேனா? பி.ஏ. படிக்கும் போது எடுத்தது'' சிரித்தபடியே ஆரம்பித்தவரின் முகம் அடுத்த கணமே சுறுங்கிவிட்டது. அனிச்சையாய் கண்களில் கண்ணீர். ''என் கோலத்தை பாத்தீங்களா? கருப்பா, அசிங்கமா, உடம்பும் பெருத்து, நடக்கவும் முடியாம! எதுக்கு நான் உயிரோடு இருக்கணும்? என்னைப் போல நிலமை வேறெந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார்'' என்படி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன் கதையச் சொல்ல ஆரம்பித்தார்.

''அப்போ எனக்கு இருபது வயசு. எப்பப் பாத்தாலும் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிடவே கஷ்டமாயிருச்சி. நெய்வேலி, நிலக்கரி நகரம் இல்லையா? ஒரே... தூசு மண்டலமா இருக்கும். அதான் ஒத்துக்கலைன்னு சொல்லி என்.எல்.சி ஆஸ்பிட்டல்ல போய்ப் பார்த்தேன். ஊசி, மாத்திரைலாம் போட்டு அனுப்பினாங்க. கொஞ்ச நாள் நல்லா இருக்கும், அப்புறம் வீசிங் வர ஆரம்பிச்சிடும். திருப்பி ஆஸ்பிட்டல், திருப்பியும் ஊசி. இப்படியே போட்டதுல உடம்பு கொஞ்சம் கொஞ்சமா ஊதி பெருசாயிட்டுது. என்.எல்.சி.யில் கேட்டப்போ, மெட்ராஸ்ல பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாம் சரியா போய்டும்னு சொன்னாங்க.
அதே மாதிரி ராமச்சந்திரா ஆஸ்பிட்டல்ல ஒரு மாசம் ஐ.சி யூனிட்ல வச்சிருந்துட்டு, 'பொண்ணுக்கு ஸ்டீராய்டு அதிகமாயிருச்சி. குணப்படுத்தறது கஷ்டம்'னு சொல்லிட்டாங்க. அங்கிருந்து என்.எல்.சி. மூலமா அப்பல்லோவுல சேர்த்தாங்க. அங்க ஒரு டாக்டர் போட்ட ஊசியால காலெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சிட்டது.

2000-ல அப்பா ரிட்டைராயிட்டார். அதனால, பிரைவேட் ஆஸ்பிட்டல்ல இருந்து என்.எல்.சி.க்கு வரவேண்டியதாப் போச்சு. அவங்க, 'கிட்னி ஃபெயிலியர் ஆகியிருக்கும் போல தெரியுது. இனிமே நீங்க சொந்தக் காசுலதான் பாத்துக்கணும்'னு அனுப்பி வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அண்ணாமலை யூனிவர்சிட்டி ஆஸ்பிட்டலுக்கு நடையா நடந்ததுல முகமெல்லாம் கறுத்து, உடம்பு ஓவரா குண்டாயிருச்சி. திடீர்னு ரெண்டு காலும் செயலிழந்து நடக்கவே முடியாமப் போயிடுச்சு. இப்போ வெளியே போகனும்னா, ரெண்டு பலகைங்களை வச்சுக்கிட்டு தவழ்ந்து, தவழ்ந்து ஆமை மாதிரி போற நிலமைக்கு வந்துட்டேன். அப்போதான் ஒரு யோசனை வந்தது. இனி உயிரோட இருந்து பிரயோஜனம் இல்ல. செத்த பிறகாவது நாலுபேருக்கு உதவட்டுமேன்னு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு என் உடம்பை தானமா எழுதி வச்சிட்டேன்.

டாக்டருங்க கடவுளுக்குச் சமம்னு சொல்வாங்க. ஆனா பாருங்க! என்னை ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி உக்கார வச்சிட்டு, 'இவங்க தான் ஸ்டீராய்ட் பேஷண்ட். ஸ்டீராய்ட் அதிகமானா இப்படித்தான் ஸ்கின் கருப்பாயிடும். இது அபூர்வமான கேஸ்'னு சொல்லி போட்டோ எடுத்தாங்க. என்னோட விரல், கை, கால், முதுகெல்லாம் அக்குவேறு ஆணிவேறா பாத்துப் பாத்து குறிப்பெடுத்தாங்க. எனக்கு அழுகை தாங்க முடியலை. வீட்டுக்கு வந்துட்டேன்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி தம்பியும், தங்கச்சியும் கல்யாணமாகி அவங்கவங்க மாமியார் வீட்டோட (மந்தாரக்குப்பம்) செட்டிலாகிட்டாங்க. சுமாமி வந்தப்போ பாண்டிச்சேரிக்கு போன எங்கப்பா இதுவரைக்கும் திரும்பி வரலை. அப்போ கடலூர் கலெக்டராக இருந்தாரே! ககன்தீப்சிங் பேடி. லயன்ஸ் கிளப் மூலமா அவர் கொடுத்த அஞ்சாயிரத்தை வச்சு நானும் எங்கம்மாவும் வடலூர்ல குடியேறினோம். ஆறுமாசம் எங்கூட இருந்த அம்மா, நடக்க முடியாதவளாச்சேன்னுகூட பாக்காம என்னைத் தனியா விட்டுட்டு, அவங்க மட்டும் தம்பி வீட்லயே போய் தங்கிட்டாங்க.

தனியா இருந்த எனக்கு எங்கப்பாவோட ஃபிரண்ட் ஒருத்தர்தான் வீட்டு வாடகை முதற்கொண்டு எல்லா உதவியும் செஞ்சார். பாவம்! அவரும் எவ்வளவுதான் செலவு பண்ணுவார்? மீண்டும் கலெக்டர்கிட்ட போய் உதவி கேட்கலாம்னு போனேன். இது நடந்து மூணு மாசம் இருக்கும். புது கலெக்டர் வந்திருக்கிறதா சொன்னாங்க. வாசல்ல பெறுக்கி கூட்டிக்கிட்டிருந்த ஒரு அம்மா, 'இந்தா! கலெக்டருக்கு இன்னா சம்பாரிச்சா போட்டுக்கிற. இப்டியே அநாதைன்னு சொல்லிக்கினு வந்துடுவாளுங்க'ன்னு அசிங்கமா பேசினாங்க. அங்க இருந்த பியூன் ஒருத்தர், 'மூச்சுவிட சிரமமா இருக்குதுன்றியே! கொஞ்சூண்டு விஷத்தை குடிச்சினா, ஒரேயடியா பிரச்சினை முடிஞ்சிடும்'ன்னார். கலெக்டர் பி.ஏ. என்னைப் பாத்துட்டு 'உன்னைப் பாத்தா எய்ட்ஸ் நோயாளி மாதிரி தெரியுது. முதல்ல வெளியே போ!'ன்னு விரட்டியடிச்சிட்டார்.

அம்மாவும் என்னை வந்து எட்டிப்பாக்குறது இல்ல. வீட்டு வாடகை கட்டாததுனால, ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொல்லிட்டார். இதோ... இன்னைக்கோ, நாளைக்கோ! எப்ப வேணாலும் செத்துப் போய்டுவேன். அதுக்கு முன்னாடி எனக்கு நடந்த கொடுமைகள இந்த உலகத்துக்குச் சொல்லணும். அதான், உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு உங்ககிட்ட சொல்றேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா அவனை அங்க போய் பாத்துக்கிறேன். என்னை மாதிரி நிலமை, உலகத்துல வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார். ம்... முக்கியமா ஒண்ணு! யாராவது டாக்டருங்களைப் பாத்தா, நான் செத்த பிறகு என் உடம்பை என்ன வேணா பண்ணிக்கச் சொல்லுங்க''

-ஒட்டுமொத்த துயரங்களையும் என் மீது சுமத்திவிட்டு அமைதியானார் பிரியா. இப்பொழுதெல்லாம் ஒரு சின்ன தும்மல் வந்தால்கூட... போட்டோவில் லட்சணமாய்ப் பார்த்த பிரியாவும், நேரில் பார்த்த பிரியாவும் மாறி, மாறி என் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள்:

பிரியா தான் எடுத்துக் கொண்ட மருந்துகளாக Ranitin, Deriphyllin, Solumedrol 125, Dexamethasone phospate (Decdan) ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமாக கல்பாக்கம் மக்கள் மருத்துவரான புகழேந்தியிடம் கேட்டபோது, ''ஸ்டீராய்ட் என்பது எந்த ஒரு வியாதிக்குமான மருந்து. இயல்பு நிலைக்கு மாறாக உடல் கடின சூழலுக்கு ஆளாகும்போது தன்னிச்சையாக உடம்பில் ஸ்டீராய்ட் உற்பத்தியாகும். இந்த நிலையில், ஊசி மூலமாகவும் ஸ்டீராய்ட் செலுத்தப்பட்டால் உடலில் உப்புச்சத்து அதிகமாகி தேவையில்லாத சதைவிழ ஆரம்பிக்கும். பிக்மெண்டேஷன் எனப்படும் கருப்பு நிறமிகள் உருவாகி உடல் கறுத்துப் போகும். மேலும் கால்சியம் வெளியேறி எலும்புகள் உருக ஆரம்பிப்பதால் Proximal Myopathy ஏற்பட்டு தொடையில் உள்ள தசைகள் செயலிழந்து நடக்க இயலாமல் போயிருக்கும். கண்பார்வை, மூளை ஆகியவற்றை மங்கச்செய்து தொடர்ந்து ஸ்டீராய்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கும். பிரியா எடுத்துக் கொண்ட மருந்தில் ஸ்டீராய்டான Decdan மட்டுமே தீவிரமான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடியது'' என்கிறார்.

''எமர்ஜென்சியின் போது மட்டுமே ஸ்டீராய்ட் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அலர்ஜியினால் பாதிக்கப்படுபவர்கள் பொது மருத்துவர்களை நாடாமல் அதற்கென்று உள்ள ஸ்பெஷலிஸ்டுகளை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது'' என்கிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அலர்ஜி ஸ்பெஷலிஸ்டான பஷீர் அகமது.